முஸ்ஹஃபில் 92-ஆவது சூரா, 21 வசனங்கள், 595-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. இரவின் மீது சத்தியமாக, அது மூடும்போது!
2. பகல் மீது சத்தியமாக, (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது!
3. ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
4. (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி (-உழைப்பு) பலதரப்பட்டதாக இருக்கிறது.
5. ஆக, யார் தர்மம் புரிந்தாரோ, இன்னும், அல்லாஹ்வை அஞ்சினாரோ,
6. இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ,
7. அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் இலகுவாக்குவோம்.
8. ஆக, யார் கஞ்சத்தனம் செய்தாரோ, (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினாரோ,
9. இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தாரோ,
10. அவருக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.
11. அவர் (நரகத்தில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது (-அவனை விட்டும் அல்லாஹ்வின் தண்டனையை தடுக்காது).
12. நிச்சயமாக (நன்மையை, தீமையை பிரித்தறிவித்து) வழிகாட்டுதல் நம்மீது கடமை ஆகும்.
13. நிச்சயமாக மறுவுலக வாழ்க்கையும் இந்த உலக வாழ்க்கையும் நமக்கே உரியது!
14. ஆக, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.
15. அதில் எரிய மாட்டான், பெரிய தீயவனைத் தவிர.
16. அவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும், புறக்கணித்தான்.
17. இன்னும், அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்.
18. அவர் மனத்தூய்மையை (அல்லாஹ்விடம் நன்மையை) நாடியவராக தன் செல்வத்தை (தர்மம்) கொடுக்கிறார்.
19. யார் ஒருவருக்கும் பிரதி பலன் செய்யும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இருக்காது.
20. எனினும், அவரோ உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடியே தர்மம் செய்வார்.
21. இன்னும், (அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக அவர் திருப்தியடைவார்.
பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)
மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.